உண்மை சுதந்திரம் எப்போது. (மீள்பதிவு சில மாற்றங்களுடன்)

Saturday, 15 August, 2009

இன்று சுதந்திர தினம் – காலையில் இருந்தே பிள்ளைகள் அனைவரும் ஏதோ ஒரு சந்தோசத்தோடு இந்திய கொடியை சட்டையில் குத்தி கொண்டு ஒருவித பெருமித்தோடு இருப்பதை பார்க்கும் போது – ஒரு காலத்தில் நாமும் (நாமும் என்பதைவிட நான் என்பதே சரி) அப்படிதான் இருந்தோம் – ஆனால் இன்று அவ்வாறு இருக்கமுடியவில்லை ஏன் என்று யோசிக்கும் போது தான் தெரியுது பள்ளி பருவம் வேறு உண்மை வாழ்கை வேறு என்பது.நான் சொல்ல நினைக்கிற (பிறரிடமிருந்து பெற்றதே) விசயம் மேலோட்டமாக பார்த்தா கண்டிப்பாக என்னை வெறுக்க தோன்றும். ஆனால் அனைத்தும் யதார்த்தம் (போலியாக நல்லவனாக இருப்பதைவிட உண்மையாக இருப்பது எவ்வளவோ மேல் என்பது என் கருத்து)படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பின்னூடமிடவும் நன்றி.இந்தியா என்பது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின்போது உருவாக்கப் பட்டு ஆண்டுகளுக்கு முன்பு சுதந்திரநாடு என்று பிரகடனப்படுத்தப் பட்ட நாடு.


நாடு என்று சொல்லப் பட்டாலும் இது உண்மையில் ஒரு கண்டம் - தென்னாசியக் கண்டம்.
இதன் மக்கள் தொகை ஒரு கண்டமான ஐரோப்பாவை விட அதிகம்.

ஒரு விதத்தில் இந்தியாவை ஐரோப்பாவிற்கு ஒப்பிடலாம்.
ஐரோப்பா மாதிரி இங்கு பல மொழிகள் பேசும் பல கலாச்சாரம் கொண்ட தேசிய இனங்கள் உள்ளன.
ஐரோப்பாவில் வெள்ளை நிறத்தவர்கள், இங்கு பிரவுன் நிறத்தவர்கள்.


ஐரோப்பாவில் ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் ஒவ்வொரு நாடு உண்டு.


(உதாரணத்துக்கு தமிழ்நாடு என்று எடுத்து கொண்டால் அது ஜெர்மன் நாடு அளவு இருக்கும். ஆந்திரம் பிரான்ஸ் அளவு இருக்கும் – நிலபரப்பும், மக்கள் தொகையும் வளங்களும்)
அத்துடன் கடந்த பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உண்டுபண்ணி அதில் பல ஐரோப்பிய நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன.


இப்படி தனிநாடாக இருப்பதில் உள்ள நன்மைகள் இவைகள் என்று சொல்லலாம்
ஒவ்வொரு இனமும் தமது மொழி, இனம் என்ற அடையாளங்களை மற்றைய இனத்தவர்களின் மேலாதிக்கத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள முடிகிறது.
தமது பொருளாதார சமூக நலன்களையும் திட்டம் போட்டு முன்னேற்றம் செய்கிற வாய்ப்பையும் தமக்கென்று ஒரு ராணுவம், வெளியுறவுக் கொள்கைகள் என்பனவும் வைத்திருக்க முடிகிறது. மிக முக்கியமாக தாய் மொழிகல்வி சாத்தியமாகிறது – இதன் பயன் அனைவருக்கும் தெரியும்.


ஒன்று சேர்ந்து இந்தியா என்று இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன.
வர்த்தகம், வேலைவாய்ப்பு, சுலபமாக ஒரு பகுதியில் இருந்து மற்றைய பகுதிக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யக் கூடிய ஒரு நன்மை. அவர்களுக்கும் நன்மை ,எங்களுக்கும் நன்மை.

ஒரு பெரிய நாட்டின் பகுதியாக இருக்கும்போது மக்களுக்கு பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஆனால் இந்த உத்தரவாதம் நமது தமிழ் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த விஷயத்தில் இந்திய நாடு தனது குடிமக்களுக்கான கடமையைச் செய்யத் தவறி விட்டது.


எதிர்காலத்தில் நாம் ஐரோப்பிய நாடுகள் மாதிரியான ஒரு நிலையை எடுத்து தனி நாடுகளாகப் பிரிந்து, அதே சமயம் இந்திய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கலாம் அந்த ஒன்றியம், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மாதிரி பொதுவான பாஸ் போர்ட் வைத்திருக்கலாம், ஒரு இடத்திலருந்து இன்னொரு இடத்துக்கு வேலைக்காகவோ வர்த்தகத்துக்காகவோ போகவும் மற்றைய இடங்களின் வாழவும் தடை இல்லாமலும் இருக்கும். அத்துடன் ஐரோப்பாவில் யூரோ என்ற பொது நாணயம் இருப்பது மாதிரி இங்கும் ரூபாய் என்ற பொது நாணயம் இருக்கும்.

அத்துடன் தமக்கு தனி ராணுவம் இருந்தாலும் ,பொதுவான நேட்டோ மாதிரி ஒரு அமைப்பை இந்திய ஒன்றியத்தில் உள்ள எல்லா நாடுகளின் பாதுகாப்புக்கும் உருவாக்கலாம் .ஐரோப்பிய கோர்ட் மாதிரி அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி, காவிரி, முல்லைப்பெரியாறு மாதிரியான எல்லைத் தகராறுகளை தீர்க்கலாம், கட்டுப்படாத நாடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்டும் வர்த்தக ரீதியுலும் தண்டனை கொடுக்கலாம்.

அத்துடன் இலங்கை,மாலைதீவு நேபாளம் பூடான் போன்ற குட்டித் தென்னாசிய நாடுகளையும் இந்த ஒன்றியத்தில் இணைத்து கொள்ளலாம்


என்ன எனக்கு பைத்தியம் பிடித்துவிட்டது என்று நினைக்கிறீர்களா?
சொல்லமுடியாது.

எதிர்காலத்தில் இது சாத்தியம்தான்

நன்றி வணக்கம்.

9 comments:

ச.செந்தில்வேலன் 15 August 2009 at 9:45 AM  

நீங்கள் சொல்வதில் ஓரளவு எனக்கும் உடன்பாடு உண்டு பிரதீப்!!

ஆனால் ஐரோப்பாவின் நிலைமை வேறு, இந்தியாவின் நிலைமை வேறு..

ஐரோப்பா கூட்டமைப்பின் கீழ் சேர்க்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் சட்டம், பாதுகாப்பு, எல்லைக்கட்டுப்பாடு, பொருளாதாரம் என பல அளவுகோள்களை வைத்துள்ளார்கள். அதனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரிய வில்லை.

நீங்கள் தனி நாடு என்றல்.. வெளி அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்..

பார்ப்போம்.

என் பக்கம் 15 August 2009 at 10:09 AM  

நன்றி செந்தில்,

//ஆனால் ஐரோப்பாவின் நிலைமை வேறு, இந்தியாவின் நிலைமை வேறு..//

இருக்கலாம்.
அனைவரும் மனிதர்கள் தானே.
அவர்கள் நிலையை அப்படியே நகல் எடுக்க தேவையில்லை. இந்த சூழலுக்கு ஏற்றார் போல் படிபடியாக மாற்றலாம் அதாவது மாநில சுய அதிகாரத்திலிருந்து ஆரம்பிக்கலாம்.
அதாவது சுயமரியாதை இழக்காத கூட்டங்களாய் ஒற்றுமையாய் மேலே கூறிய படி வாழலாம்.

//ஐரோப்பா கூட்டமைப்பின் கீழ் சேர்க்க வேண்டுமென்றால் அந்த நாட்டின் சட்டம், பாதுகாப்பு, எல்லைக்கட்டுப்பாடு, பொருளாதாரம் என பல அளவுகோள்களை வைத்துள்ளார்கள். அதனால் இது எவ்வளவு சாத்தியம் என்று தெரிய வில்லை.//

ஆரோகியமான விவாதங்கள்/கலந்துரையாடல் வளரும் போது சாத்திய கூறுகள் அதிகரிக்கும். அடையும் வழி அல்லது உருவம் மாறுபடுமே தவிர பயன் ஒன்றாகதான் இருக்கும்.

//நீங்கள் தனி நாடு என்றல்.. வெளி அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும்..//

வெளி அச்சுறுத்தல்கள் இப்போது இல்லையா? - நம் நாட்டைவிட ஆயிரம் மடங்கு சிறிய நாடுகளும் அமைதியுடன் தான் வாழ்கிறார்கள் - எதிர்ப்பு என்பது நாம் கையாலும் விதத்தில் ஏற்படுவதே.

//பார்ப்போம்.//

நன்றி செந்தில்.

Gokul 15 August 2009 at 11:13 AM  

ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு அமைப்பாக இந்தியா மாற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன , ஆனால் அது அதிகபட்சமாக பத்தாண்டுகள்தான் நீடிக்கும் என்று நினைக்கிறேன் , ஏனெனில் ஒரு வெல்வெட் புரட்சி போன்று பேசி தீர்த்துக்கொள்ளும் பக்குவம் நம் இந்தியர்களுக்கு கிடையாது,நாம் அவ்வளவு நாகரீகமானவர்கள் கிடையாது. ஒரே நாடாக இருக்கும்போதே எவ்வளவு தூரம் பிராந்திய உணர்வை தூண்ட முடியுமோ அவ்வளவு தூண்டும் தலைவர்கள் , வெவ்வேறு நாடுகளாகிவிட்டால் சில ஆண்டுகளில் அந்த ஒன்றியத்தில் இருந்து வெளியே வர தூபம் போடுவர். மராட்டியர்கள் பீகாரிகள் வர தடை போடுவர், கன்னடர் தமிழர் வர தடை போடுவர், மத்திய ஒன்றியம் இப்போதைய சுப்ரீம் கோர்ட் மாதிரி இருக்கும் , அந்த ஒன்றியத்தின் அதிகாரத்தையே பல மாநிலங்கள் கேள்வி கேட்கும்.

மேலும், இப்போது முன்னேறிய மாநிலங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் பின்தங்கிய மாநிலங்களுக்கு கிடைக்கிறது, அது முழுவதுமாக தடை படும்.

ஆனால் நன்மைகளும் இருக்கின்றன , முன்னேறிய மாநிலங்கள் (பஞ்சாப், குஜராத்,மராட்டியம், ஆந்திரம், தமிழகம் போன்றவை) மேலும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.

தமிழ் ஈழம் என்று ஒன்றை உருவாக்கி அதுனடன் தமிழகத்தை சேர்த்து தமிழ் தேசத்தை உருவாக்க பலர் திட்டமிடுவர் :-)

minorwall 15 August 2009 at 6:53 PM  

ஹலோ,
சொல்லவேண்டியதை (I love you) சொல்லவேண்டிய பார்ட்டிகிட்டே சொல்லிட்டு எனக்கு பைத்தியம் பிடிச்சுட்டுன்னு சொல்லிட்டு தப்பிச்சிடலாம்ன்னு பாக்குறீங்களா?
ஒருவேளை பார்ட்டி ஒகே ன்னு சொல்லிட்டா அப்டியே கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நெனக்கிரீங்களோ?
இதுகூட நல்ல ideaதான். அந்த மேட்டேர்லே.

இந்த மேட்டேர்லாம் டிச்கிச்சின்(discussion) பண்ணனும்ன்னா தனியா ரூம் போட்டு பண்றது நல்லது.நீங்க பாட்டுக்கு அந்த மேட்டேருக்கும் நான் ரூம்தான் போடுவேன்.என்ன வித்தியாசம்ன்னு வில்லங்கமா கேட்டாக்க அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன்.
உங்க எல்லோருடைய நல்லதுக்காகத்தான் சொல்றேன்.இப்டி publicலே வெச்சு வேணாம்.
எண்ணித்துணிக கருமம் எண்ணுவம் என்பதிழுக்கு.
கால் வெக்கிரதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கணும். அகலக்கால் வெக்கவே கூடாது.
யாரு யாரு உங்கள எல்லாம் வாட்ச் பண்ணிட்டுருக்காங்கன்னும் தெரியாது.
நா அப்பிடித்தான்ன்னு ஈஸ்வரி மாதிரி சொல்வேன்னு அடம்பிடிச்சா..சொல்லாதீங்கோ..
எதாவுது செய்யுங்கோ..ஜூஊஊஊஊஊட்.

லவ்டேல் மேடி 15 August 2009 at 8:48 PM  

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ....

கலையரசன் 15 August 2009 at 8:54 PM  

சுதந்திர தின வாழ்த்துக்கள்...

என் பக்கம் 19 August 2009 at 11:32 AM  

நன்றி கோகுல்.

//ஐரோப்பிய யூனியன் போன்ற ஒரு அமைப்பாக இந்தியா மாற சாத்தியக்கூறுகள் இருக்கின்றன , ஆனால் அது அதிகபட்சமாக பத்தாண்டுகள்தான் நீடிக்கும் என்று நினைக்கிறேன் , ஏனெனில் ஒரு வெல்வெட் புரட்சி போன்று பேசி தீர்த்துக்கொள்ளும் பக்குவம் நம் இந்தியர்களுக்கு கிடையாது,நாம் அவ்வளவு நாகரீகமானவர்கள் கிடையாது.//

பத்தாண்டுகள் பழக்கபட்ட ஒரு விசயத்தால் நன்மை பெற்றால் அது ஏன் தொடராது?


//ஒரே நாடாக இருக்கும்போதே எவ்வளவு தூரம் பிராந்திய உணர்வை தூண்ட முடியுமோ அவ்வளவு தூண்டும் தலைவர்கள், வெவ்வேறு நாடுகளாகிவிட்டால் சில ஆண்டுகளில் அந்த ஒன்றியத்தில் இருந்து வெளியே வர தூபம் போடுவர்.//

நீங்கள் சொல்வதும் நடக்கலாம். ஆனால் ஒன்றியத்திலிருந்து வெளியேறினால் பாதிப்பு என்பதை உணர்ந்தால் கண்டிப்பாக வெளியேறமாட்டார்கள் (இப்போது உள்ள கூட்டனி ஆட்சி போல்).


//மராட்டியர்கள் பீகாரிகள் வர தடை போடுவர், கன்னடர் தமிழர் வர தடை போடுவர், மத்திய ஒன்றியம் இப்போதைய சுப்ரீம் கோர்ட் மாதிரி இருக்கும் , அந்த ஒன்றியத்தின் அதிகாரத்தையே பல மாநிலங்கள் கேள்வி கேட்கும்.//

மரட்டியர்களின் கன்னடர்களின் உரிமை இழப்பதால் தான் இந்த சண்டை தனி நாடு என்றால் வேற்று நாட்டவர் வருகையும் வேலைவாய்ப்பும் வெறும் வர்த்தகமாக தான் பார்க்கபடும். (அதாவது தேவையென்றால் ..............)


//மேலும், இப்போது முன்னேறிய மாநிலங்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாய் பின்தங்கிய மாநிலங்களுக்கு கிடைக்கிறது, அது முழுவதுமாக தடை படும். //

பின்தங்கிய மாநிலங்களின் சூழ்நிலை கண்டிப்பாக முன்னேறியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தள்ளபடும் இதுவும் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையையே உருவாக்கும். அது மட்டுமில்லாமல் இன்றைய உலகமயமாக்கலினால் அனைவரும் அனைவரை சார்ந்தே இருப்பது கட்டாயமாகிறது.


//ஆனால் நன்மைகளும் இருக்கின்றன, முன்னேறிய மாநிலங்கள் (பஞ்சாப், குஜராத்,மராட்டியம், ஆந்திரம், தமிழகம் போன்றவை) மேலும் முன்னேற வாய்ப்பு கிடைக்கும்.//

கண்டிப்பாக முன்னேறும்.


//தமிழ் ஈழம் என்று ஒன்றை உருவாக்கி அதுனடன் தமிழகத்தை சேர்த்து தமிழ் தேசத்தை உருவாக்க பலர் திட்டமிடுவர் :-) //

நல்லதுதானே.


நன்றி.

என் பக்கம் 19 August 2009 at 11:38 AM  

நன்றி மைனர்வால்,
//ஹலோ,
சொல்லவேண்டியதை (I love you) சொல்லவேண்டிய பார்ட்டிகிட்டே சொல்லிட்டு எனக்கு பைத்தியம் பிடிச்சுட்டுன்னு சொல்லிட்டு தப்பிச்சிடலாம்ன்னு பாக்குறீங்களா?
ஒருவேளை பார்ட்டி ஒகே ன்னு சொல்லிட்டா அப்டியே கரெக்ட் பண்ணிடலாம்ன்னு நெனக்கிரீங்களோ?
இதுகூட நல்ல ideaதான். அந்த மேட்டேர்லே.//
அப்படியா இந்த உள்குத்து எனக்கு தெரியாதே.


//இந்த மேட்டேர்லாம் டிச்கிச்சின்(discussion) பண்ணனும்ன்னா தனியா ரூம் போட்டு பண்றது நல்லது.//
எப்ப வரீங்க ரூமுக்கு?

//நீங்க பாட்டுக்கு அந்த மேட்டேருக்கும் நான் ரூம்தான் போடுவேன். என்ன வித்தியாசம்ன்னு வில்லங்கமா கேட்டாக்க அதுக்கெல்லாம் நான் பொறுப்பாக மாட்டேன்.
உங்க எல்லோருடைய நல்லதுக்காகத்தான் சொல்றேன். இப்டி publicலே வெச்சு வேணாம்.
எண்ணித்துணிக கருமம் எண்ணுவம் என்பதிழுக்கு.
கால் வெக்கிரதுக்கு முன்னாடி ரொம்ப யோசிக்கணும். அகலக்கால் வெக்கவே கூடாது.//
சரீங்க.

//யாரு யாரு உங்கள எல்லாம் வாட்ச் பண்ணிட்டுருக்காங்கன்னும் தெரியாது.
நா அப்பிடித்தான்ன்னு ஈஸ்வரி மாதிரி சொல்வேன்னு அடம்பிடிச்சா..சொல்லாதீங்கோ..
எதாவுது செய்யுங்கோ..ஜூஊஊஊஊஊட்.//
அட எங்க ஓடிட்டீங்க...............

நன்றி.

Joe 21 August 2009 at 5:13 PM  

//
ஐரோப்பிய கோர்ட் மாதிரி அதிகாரம் மிக்க சக்தி வாய்ந்த அமைப்பை உருவாக்கி, காவிரி, முல்லைப்பெரியாறு மாதிரியான எல்லைத் தகராறுகளை தீர்க்கலாம், கட்டுப்படாத நாடுகளுக்கு நஷ்ட ஈடு கேட்டும் வர்த்தக ரீதியுலும் தண்டனை கொடுக்கலாம்.
//
அருமையான கருத்து.

நாடு என்பதே ஒரு கற்பிதம், தேசியம் என்பதெல்லாம் தேவையில்லை என்று பெரியார் சொன்னதை படித்திருப்பீர்கள்.
எல்லைக் கோடுகள் அற்ற ஒரு உலகம் வேண்டும்.

Related Posts with Thumbnails

  © Free Blogger Templates Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP